மத்திகிரி அருகே கிணற்றில் மூழ்கி 2 பேர் பலி

மத்திகிரி அருகே கிணற்றில் மூழ்கி 2 பேர் பலியானார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

Update: 2020-10-19 06:07 GMT
மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள சொப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 20). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய உறவினர் நாகராஜ் (35). கட்டிட மேஸ்திரி. நேற்று இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலம் வழியாக சென்றனர். அங்கு இருந்த குருவி ஒன்றை பிடிப்பதற்காக சதீஷ் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ், சதீசை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். இதில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.

தண்ணீரில் தத்தளித்த அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரில் தத்தளித்த 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் சதீசும், நாகராஜூம் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இது குறித்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கி இறந்த சதீஷ், நாகராஜ் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்