மீனவ தொழிலாளர்கள் கையில் திருவோடு ஏந்தி போராட்டம்

ராமேசுவரத்தில் மீனவ தொழிலாளர்கள் கையில் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Update: 2020-10-19 04:23 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் கரையோரம் உள்ள கடல் பகுதியில் சிறு நாட்டுப்படகில் மற்றும் மிதவை மூலம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இடையூறாக மீன் பிடித்து வரும் விசைப் படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் படகுகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு தடைசெய்யப்பட்ட வலைகளில் மீன் பிடிப்பை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மீன் பிடிக்க சென்று கடலில் தவறி விழும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்க ரோந்து படகு வாங்குவதற்கு கூட நிதி இல்லை என கூறும் அரசை கண்டித்தும் சி.ஐ.டி.யு. மீன்பிடி தொழிற்சங்கம் சார்பில் கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நிர்வாகி சுடலை காசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சங்குமால் மற்றும் ஓலைகுடாபகுதியில் மிதவை மூலம் மீன்பிடித்து கரை திரும்பிய ஏராளமான மீனவர்களிடம் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதுபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-ந்தேதி ராமநாதபுரத்தில் உள்ள மீன்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்