பாலியல் பலாத்கார வழக்கு: தலைமறைவாக இருந்த காங்கிரஸ் பிரமுகர் சிக்கினார்

பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் பிரமுகர், தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது போலீசில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

Update: 2020-10-19 03:23 GMT
பாலக்காடு,

பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு அருகே கோவிந்தாபுரம் உள்ளது. இங்குள்ள அம்பேத்கர் காலனியில் வசித்து வருபவர் சிவராஜன்(வயது 38). இவர் காங்கிரஸ் கட்சியின் பாலக்காடு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிவராஜன், அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி தனியாக காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அதன்பின்னர் தொடர்ந்து அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று, சிவராஜன் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அந்த பெண், கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்தைக்கூறி சிவராஜன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன்பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவராஜனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து அவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கொல்லங்கோடு பகுதியில் சிவராஜன் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து பாலக்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்