காஞ்சீபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை களை கட்டியது - சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சீபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை களை கட்டியதால் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;
காஞ்சீபுரம்,
கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவில் தளர்வினை ஏற்படுத்தி வணிக நிறுவனங்கள் திறக்கவும், பொதுப்போக்குவரத்து செயல்படவும், மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக பட்டு நகரம் என பிரசித்தி பெற்ற காஞ்சீபுரத்தில் பட்டு சேலை வியாபாரம் நடைபெறாமல் முடங்கிய நிலையில் வியாபாரிகளும் நெசவாளர்களும் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளால் பட்டுசேலை விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பட்டு சேலை வியாபாரம் குறைந்த அளவில் நடைபெற்று வந்தது.
புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ள நிலையில் முகூர்த்த நாளான நேற்று காஞ்சீபுரம் நகரிலுள்ள பட்டு சேலை விற்பனை கடைகளிலும், பட்டு கூட்டுறவு சங்கங்களிலும், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஏராளமான பொதுமக்கள் பட்டு சேலையை வாங்க காஞ்சீபுரத்தில் குவிந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பட்டு சேலை வியாபாரம் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பட்டு சேலை எடுக்க வெளியூர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் பொதுமக்கள் வந்து சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி உள்ளதால் காஞ்சீபுரம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.