பெரணமல்லூர் அருகே, பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் லாரி டிரைவர் கைது - 9 மாதத்துக்கு பின் சிக்கினார்

பெரணமல்லூர் அருகே பெண்ணை கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 மாதத்துக்கு பிறகு நேற்று முன்தினம் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-10-18 13:15 GMT
சேத்துப்பட்டு, 

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள வேளாண்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி லட்சுமி (வயது 49). இவர்களுக்கு சொந்தமான நிலம் ரகுநாதசமுத்திரம் அருகே ஒரு கிராமத்தில் உள்ளது. அவர்கள் தங்களின் நிலத்தில் வேர்க்கடலை பயிர் சாகுபடி செய்திருந்தனர். இரவில் காட்டுப்பன்றிகள் வேர்க்கடலை பயிரை நாசப்படுத்தி வந்தன. காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக லட்சுமி இரவில் சென்று நிலத்தில் தங்கி, வேர்க்கடலை பயிரை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி இரவு வழக்கம்போல் நிலத்துக்குச் சென்ற லட்சுமியை, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் நடராஜன் (26) என்பவர் பின்தொடர்ந்து சென்றார். காட்டுப்பன்றிகளை விரட்டியடிக்கவும், வேர்க்கடலை பயிருக்கு காவல் காக்கும் பணியிலும் நிலத்தில் இரவில் தனியாக இருந்த லட்சுமியை, அங்குச் சென்ற நடராஜன் தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், வலுக்கட்டாயமாக லட்சுமியை கற்பழித்துள்ளார்.

லட்சுமியை கற்பழித்த தகவல் வெளியில் தெரிந்தால் தனக்கு ஆபத்து ஏற்படும் எனப்பயந்த நடராஜன், லட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை அங்கிருந்த ஒரு கிணற்றில் தூக்கி வீசி விட்டார். அத்துடன் தடயங்களை மறைப்பதற்காக நடராஜன், தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

அரை நிர்வாணத்துடன் போதையில் இருந்த அவர், லட்சுமி அணிந்திருந்த ஒரு தங்கச் சங்கிலியை திருடிக் கொண்டார். இரவில் எங்குச் செல்வதென விழித்த அவர், அங்குள்ள ஒரு முட்புதரில் படுத்துத்தூங்கி விட்டு அதிகாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து, லாரி ஓட்ட சென்று விட்டார். அன்று முதல் தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் நடராஜன் நடந்து கொண்டார்.

இதுகுறித்து லட்சுமியின் மகன் ஜவஹர், நிலத்துக்குச் சென்ற தனது தாயாரை காணவில்லை என பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நிலத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்த லட்சுமியை போலீசார் ஜனவரி மாதம் 8-ந்தேதி மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் லட்சுமி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து கொலையாளியை பிடிக்க செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், கன்னியப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவ இடத்துக்கும், பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த நடராஜன் 9 மாதத்துக்கு பிறகு நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் முன்னிலையில் சரண் அடைந்து, லட்சுமியை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து, மேற்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், போலீசாரிடம் நடராஜனை ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்