லாலாபேட்டையில் 6 மாதத்திற்கு பிறகு கூடிய வாரச்சந்தை விவசாயிகள்-வியாபாரிகள் மகிழ்ச்சி

லாலாபேட்டையில் 6 மாதத்திற்கு பிறகு வாரச்சந்தை கூடியதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update: 2020-10-15 06:14 GMT
லாலாபேட்டை,

கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், வழிபாட்டு தலங்கள், மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், வாரச்சந்தைகள் ஆகியவற்றை திறக்க தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இதனால், விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பூக்கள், வாழைத்தார்களை என்ன செய்வது என்று தெரியாமல் குறைந்து விலைக்கு விவசாயிகள் விற்று வந்தனர். குறைந்த விலைக்கும் வாங்கப்படாத காய்கறிகள், பூக்கள், வாழைத்தார்களை குப்பைகளில் வீசிச் சென்றனர். இதனால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகினர்.

தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு பெரும்பாலான தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளை தவிர ஏனைய அனைத்து இடங்களும் திறக்கப்பட்டு விட்டன. வாரச்சந்தைகளும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாபேட்டையில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதமாக சந்தை செயல்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் நேற்று வாரச்சந்தை கூடியது. வாரச்சந்தையில், லாலாபேட்டை மற்றும் சுற்றியுள்ள மகிழிபட்டி, பழைய ஜெயங்கொண்டம், புனவாசிபட்டி, கொம்பாடிபட்டி, பாலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதேபோல, பல தரப்பட்ட வியாபாரிகளும் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 6 மாதத்திற்கு பிறகு வாரச்சந்தை கூடியதால் விவசாயிகள், வியாபாரிகள் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்