பெரம்பலூரில் கலெக்டர் வராததால் கூட்டத்தை புறக்கணித்து, அரசியல் கட்சியினர் வெளிநடப்பு

பெரம்பலூரில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு கலெக்டர் வராததால், கூட்டத்தை அரசியல் கட்சியினர் புறக்கணித்து, வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2020-10-15 05:33 GMT
பெரம்பலூர்,

வருகிற சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாகவும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 4 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளதாக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு கடிதம் விடுக்கப்பட்டிருந்தது.

இதனால் அந்த கூட்டத்தில் பங்கேற்பதாக நேற்று மாலை 4 மணிக்கு முன்னதாகவே அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க., பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலெக்டர் அலுவலக கூட்டரங்கிற்கு வந்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஒரு மணி நேரம் தாமதமாகியும் கலெக்டர் சாந்தா கூட்டத்திற்கு வராததால், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இதனால் கலெக்டர் சாந்தா வராததை கண்டித்தும், கூட்டம் நடைபெறாததை கண்டித்தும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும், கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்