மலைக்கிராமங்களில் மறைத்து வைத்துள்ள கள்ளத்துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுமா காவல்துறை? மாவட்டம் முழுவதும் சோதனை நடத்த தனிப்படைகள்

மலைக்கிராமங்களில் மறைத்து வைத்துள்ள கள்ளத்துப்பாக்கி கலாசாரத்துக்கு, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை முடிவு கட்டுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் கள்ளத்துப்பாக்கிகள் குறித்து சோதனை நடத்த தனிப்படைகள் அமைக்கப்படுகிறது.

Update: 2020-10-15 03:05 GMT
திண்டுக்கல்,

மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலமாக திண்டுக்கல் மாவட்டம் திகழ்கிறது. 3 திசைகளிலும் மலைகளை அரணாக கொண்ட இந்த மாவட்டத்தில் மூன்றுபோகம் சாகுபடி நடைபெறாவிட்டாலும், விவசாய பூமியாகவே திகழ்கிறது. மேலும் சமவெளி பரப்பு, மலையடிவார பகுதி மட்டுமின்றி மலைகளிலும் விவசாயம் நடக்கிறது. இதில், ஒரு சில மலைப்பகுதியில் பல தலைமுறையாக விவசாயம் நடைபெற்று வருகிறது.

அதேநேரத்தில் மலைப்பகுதியில், வனவிலங்குகளின் தொல்லைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக யானைகள், காட்டெருமைகள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அதை தடுக்க இரவு நேரத்தில் விவசாயிகள் காவலுக்கு செல்லும் நிலை உள்ளது. அதுபோன்ற நேரத்தில் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, விவசாயிகள் உயிரிழப்பதும் அவ்வப்போது அரங்கேறுகிறது.

விளைபொருட்களுக்கு லாபகரகமான விலை கிடைக்காமல் போனாலும், ஆபத்துகளை சந்தித்து விவசாயம் செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வனவிலங்குகளிடம் இருந்து விவசாயிகள் தங்களை தற்காத்து கொள்வதற்கு தீப்பந்தம், அரிவாள், ஈட்டி போன்றவற்றை பயன்படுத்துவது உண்டு. ஆனால், ஒருசில விவசாயிகள் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்து கொள்கின்றனர்.

அந்த வகையில், மாவட்டம் முழுவதும் 1,280 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருக்கின்றனர். இந்த துப்பாக்கி உரிமத்தை முறையாக புதுப்பிக்க வேண்டியது கட்டாயம். மேலும் துப்பாக்கி வைத்திருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, துப்பாக்கி உரிமம் எளிதில் கிடைத்து விடாது. இதனால் சிலர் உரிமம் பெறாமல், கள்ளத்துப்பாக்கிகளை வாங்கி பயன்படுத்துவதும் உண்டு. அதுபோன்ற நபர்கள் போலீசாரிடம் சிக்கி கொள்வதும் அடிக்கடி நடைபெறும்.

இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மலைக்கிராமங்களில் பலரிடம் கள்ளத்துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது. விவசாய நிலங்களுக்கு வரும் வனவிலங்குகளை விரட்டுவதற்கு மட்டுமின்றி வேட்டையாடவும் சிலர் கள்ளத்துப்பாக்கியை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்வதற்கு போலீசார் திட்டமிட்டனர்.

ஆனால், கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்களில் பலர் வீடுகளில் அதை பதுக்குவது இல்லை. விவசாய நிலங்கள் அல்லது அருகேயுள்ள வனப்பகுதியில் பதுக்கி வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கள்ளத்துப்பாக்கிகளை முழுமையாக கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா புதிய யுக்தியை கையாண்டார்.

அதன்படி போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து மலைக்கிராமங்களில் கூட்டம் நடத்துகின்றனர். அதில் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். இதுமட்டுமின்றி திடீரென கிராமத்துக்குள் நுழைந்து போலீசார் அதிரடியாக சோதனை நடத்த தொடங்கினர்.

ஒருபுறம் எச்சரிக்கை, மறுபுறம் அதிரடி சோதனை என போலீசார் கடும் கெடுபிடி செய்தனர். இதையடுத்து கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வேறுவழியின்றி ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் வீசி செல்ல தொடங்கி விட்டனர். இதில் கடந்த மாதம் சாணார்பட்டி அருகே தவசிமடையில் சிறுமலை அடிவாரத்தில் வனப்பகுதியில் அடுத்தடுத்து 2 நாட்களில் 24 கள்ளத்துப்பாக்கிகள் வீசப்பட்டன.

இதையடுத்து சிறுமலையில் கடமான்குளம் கிராமத்தில் 28 கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தும் குழல்கள் வீசப்பட்டு கிடந்தன. மேலும் போலீசாரின் வேட்டையிலும் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை மொத்தம் 50 கள்ளத்துப்பாக்கிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளன.

இதற்கிடையே நத்தம், ஆடலூர், பன்றிமலை, பாச்சலூர், தாண்டிக்குடி, பெரும்பாறை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலர் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே, அந்த பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அந்தந்த உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்படுகிறது. இந்த தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட கிராமத்துக்குள் புகுந்து திடீர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்கவும் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்