கம்பத்தை சேர்ந்த வாலிபர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7¼ லட்சம் மோசடி - இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர்-தம்பி மீது வழக்கு

கம்பத்தை சேர்ந்த வாலிபர்களுக்கு, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7¼ லட்சம் மோசடி செய்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் மற்றும் அவருடைய தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-10-15 02:38 GMT
தேனி,

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம்மெட்டு சாலையை சேர்ந்த காஜா மைதீன் மகன் முகமது அலிஜின்னா (வயது 33). இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு மொரீசியஸ் நாட்டில் கூலிவேலைக்கு ஆட்கள் அழைத்து செல்லப்பட உள்ளதாக வாட்ஸ்-அப் மூலம் ஒரு தகவலை அறிந்தார். அதில், கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது இஷ்ஹாக் (25) என்பவருடைய செல்போன் எண் இருந்தது.

பின்னர் அவரை தொடர்பு கொண்ட முகமது அலி ஜின்னா தானும், தனது உறவினர்களான கம்பத்தை சேர்ந்த ஜாகீர் உசேன், முகமது ஹனிபா ஆகியோரும் மொரீசியஸ் நாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தனர். பின்னர் அவர், கம்பம் மெட்டு சாலையில் முகமது இஷ்ஹாக்கின் அண்ணன் முகமது சாதிக் (33) என்பவரின் கணினி மையத்துக்கு சென்று வெளிநாட்டு வேலை குறித்த விவரங்களை கேட்டார். அப்போது மொரீசியஸ் நாட்டுக்கு செல்வதற்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலவு ஆகும் என்று அண்ணன், தம்பி இருவரும் கூறினர்.

இதை நம்பிய அவர், ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அவர்களின் உறவினர்களான ஜாகீர்உசேன் ரூ.2 லட்சத்து 40 ஆயிரமும், முகமது ஹனிபா ரூ.2 லட்சத்து 65 ஆயிரமும் கொடுத்தனர். பின்னர் அவர்கள் 3 பேருக்கும், வேலைவாய்ப்பு ஒப்பந்த உடன்படிக்கை வழங்கி, சுற்றுலா விசாவில் மொரீசியஸ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சென்ற நிலையில், அந்த வேலைவாய்ப்பு ஒப்பந்தம் போலியானது என்பது தெரியவந்தது. இதனால், அவர்கள் 3 பேரும் சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். இதற்கிடையே தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு முகமது சாதிக் மற்றும் அவருடைய தம்பியிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முகமது அலி ஜின்னா புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் மொத்தம் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் மோசடி செய்த முகமது இஷ்ஹாக், முகமது சாதிக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், முகமது சாதிக் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். இவர், சமூக வலைத்தளங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக அவதூறுகள் பரப்பியதாக எழுந்த புகாரின் பேரில், கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று முன்தினம் கைது செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மோசடி வழக்கில் அவருடைய தம்பி முகமது இஷ்ஹாக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்