அரசு திட்டங்களை நிறைவேற்ற முடியாததற்கு கவர்னர் தான் பொறுப்பு அமைச்சர் கந்தசாமி பேச்சு

அரசு திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு கவர்னர் கிரண்பெடி பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-14 22:46 GMT
பாகூர்,

ஏம்பலம் தொகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உதவிக்குழுவினர் சுயதொழில் தொடங்க அமைச்சர் கந்தசாமி ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி மாவட்ட தொழில் மையம் சார்பில் அரசு துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுடன் சேர்ந்து சுய வேலைவாய்ப்பு-தொழில் முனைவோர் பயிற்சி சம்பந்தமான விழிப்புணர்வு திறன் மேம்பாட்டு முகாம் பனித்திட்டு அரசு பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சுய வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி குறித்து விளக்கங்களை எடுத்துக் கூறினர்.

கவர்னர் தான் பொறுப்பு

அதனைதொடர்ந்து அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் எந்த கோப்புகளை அனுப்பினாலும் கவர்னர் ஏதாவது ஒரு காரணம் சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறார். நாங்கள் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு கவர்னர் தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆட்சியில் புதுச்சேரி மக்களுக்கு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினோம். ஆனால் இந்த ஆட்சியில் செய்ய முடியாததற்கு காரணம் யார்? என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் இளைஞர்களும், பெண்களும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்து வருவதற்கு மாற்றாக சுயதொழில் தொடங்க ஏற்பாடு செய்து வருகிறோம். உங்களை தேடி அதிகாரியை அழைத்து வந்துள்ளோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சுயதொழில் தொடங்க வேண்டும். திட்டத்திற்கு தகுந்தவாறு ஒரு கோடி ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிகளில் 50 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ. 1.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் அரங்கநாதன், தொழிலாளர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி மைய இயக்குனர் சரவணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக் குனர் டாக்டர் குமாரவேலு, மாவட்ட தொழில் மைய துணை இயக்க மேலாளர் அரங்கநாதன், ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் இளஞ்செழியன், தொழில் நுட்ப மைய உதவி பேராசிரியர் ராஜேஷ், கதர் மற்றும் கிராம தொழில் வாரிய கடன் மேற்பார்வையாளர் ஜெயராஜ், மாவட்ட தொழில் மைய இயக்க மேலாளர் குமார், கடன் பிரிவு அதிகாரிகள் வின்சென்ட், ஜெயராமன், தொழில் துறை உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி மலர், மீன் வளத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்