உலக பேரிடர் தினத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி
உலக பேரிடர் தினத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை,
உலக பேரிடர் தினத்தையொட்டி கோவை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளே சிக்கி இருப்பவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்பதை கண்டறியும் கருவி, கான்கிரீட் கட்டர், டிரில்லர், தீயணைப்பு உபகரணங்கள், தண்ணீரில் காப்பாற்ற உபயோகிக்கும் மோட்டார் ரப்பர் படகு, ரோப்லேடர், ஹைட்ராலிக் கட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க ப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஜெகதீஷ் தலைமையில் கோவை தெற்கு, வடக்கு, பீளமேடு, கணபதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, அன்னூர் தீயணைப்பு வீரர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் கலந்துகொண்டு பேசும்போது, தீயணைப்பு துறையின் பணி மகத்தானது. பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறை வீரர்களின் தீவிர முயற்சியால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. மேலும் சாதாரண பொருட்களை கொண்டு மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என்பதை தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் மூலம் காண்பித்து உள்ளனர், என்றார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ், தனலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், வருவாய் துறை அதிகாரிகள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.