கணியம்பாடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பழமையான கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கணியம்பாடியில் 300 ஆண்டு பழமையான கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அடுக்கம்பாறை,
வேலூர்- திருவண்ணாமலை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. பாகாயம் முதல் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை 4 வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. தற்போது அடுக்கம்பாறையில் இருந்து கண்ணமங்கலம் கூட்ரோடு வரை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது.
முதல் கட்டமாக கணியம்பாடியில் இருந்து அமிர்தி செல்லும் சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதில் கணியம்பாடியில் சாலையோட்டி 300 ஆண்டு பழமையான ஸ்ரீபடவேட்டம்மன் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சுற்றுச்சுவர் மற்றும் ராஜகோபுரம் வரை உள்ள பகுதிகளை சாலை பணிக்காக இடிக்க முடிவு செய்துள்ளனர். அனைத்து அம்மன் கோவில்களிலும் கர்ப்பகிரகம் எதிரே சிங்க வாகனம் இருக்கும். ஆனால் படவேட்டம்மன் கோவிலில் அம்மன் எதிரே நந்தி வாகனம் இருப்பது மிகவும் சிறப்புடையது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று காலை கோவில் ராஜகோபுரம் மற்றும் சுற்றுச்சுவரை இடிக்க வந்தனர்.
இதனை அறிந்த இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டனர். கோவில் சுவரை இடிக்காமல் பணியை முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுப்பதாகவும், பழமையான கோவிலை எந்த காரணத்திற்காகவும் இடிக்கக் கூடாது என்றும் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில் இடிக்க நடவடிக்கை எடுத்தால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நெடுஞ்சாலைதுறையினர் அங்கிருந்து சென்று விட்டனர்.