வேலூரில், ரூ.5 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - 5 குடோன்களுக்கு ‘சீல்’
வேலூரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 5 குடோன்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வேலூர்,
வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் சென்றது. அதன்பேரில் அவரது தலைமையில் நகர்நல அலுவலர் சித்ரசேனா, 2-ம் மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார், காதார ஆய்வாளர் ஈஸ்வரர் மற்றும் ஊழியர்கள் கொண்ட குழுவினர் நேற்று திடீரென வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களும், 3 குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்குள்ள ஒரு குடோனை திறக்க முடியாததால் அதை நாளை (இன்று) திறந்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த 4 குடோன்களுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதனிடையே நகர்நல அலுவலர் சித்ரசேனா ஆய்வு மேற்கொண்ட போது, அங்குள்ள ஒரு குடோனில் உரிய பாதுகாப்பு இன்றி பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தீ விபத்து ஏற்படும் வகையில் பாதுகாப்பு அற்ற முறையில் பட்டாசு வைக்கப்பட்டிருந்ததால் அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்தவர்களுக்கு ரூ.1¼ லட்சம் அபராம் விதிக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். மேலும் பட்டாசு பதுக்கி வைத்திருந்த அதன் உரிமையாளர் பாஷா (40) என்பவரை கைது செய்தனர்’ என்றனர்.
ஆய்வையொட்டி வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.