ஓச்சேரியில், காயத்துடன் பிணமாக கிடந்த கட்டிட மேஸ்திரி கொலையா? போலீஸ் விசாரணை

காவேரிப்பாக்கம் அருகே தலையில் ரத்தக்காயங்களுடன் கட்டிட மேஸ்திரி இறந்துகிடந்தார். அவரை யாரும் கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-10-14 11:45 GMT
காவேரிப்பாக்கம்,

காவேரிப்பாக்கத்தை அடுத்த பொய்கைநல்லூர் மக்ளிங் கால்வாய் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் தலையில் ரத்தக்காயங்களுடன் இறந்துகிடந்தார். இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்தவர் காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 40) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக சுரேஷ் தனது மனைவி சித்ராவை பிரிந்து தாமல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். சித்ரா காவேரிப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ் ஓச்சேரி அருகே தலையில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து பொய்கைநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமிபதி (காவேரிப்பாக்கம்), பாரதி (பாணாவரம்), ஜெயபிரகாஷ் (சோளிங்கர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் இறந்த இடத்தில் ரத்தத்துடன் கட்டுக்கல் மற்றும் மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. இதனால் அவரை யாராவது கொலை செய்தார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக தாமல் பகுதியை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்