பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் - நாகை எம்.பி. செல்வராஜ் தலைமையில் நடந்தது
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி நாகை எம்.பி. செல்வராஜ் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
மன்னார்குடி,
2019-20-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு பயிர் காப்பீடு செய்தும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இதே நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கோட்டூர் ஒன்றியத்தில் விடுபட்ட அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் செல்வராஜ் எம்.பி. பேசுகையில்,
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான கணக்கீடு முறையை காரணம் காட்டி மாவட்ட கலெக்டர் சொல்லும் சமாதானங்களை ஏற்க முடியவில்லை. தொடர்ச்சியாக பல கிராமங்களுக்கு பயிர் காப்பீடு செய்தும் இழப்பீட்டு தொகை கிடைக்க பெறவில்லை. இதற்கு வருவாய்த்துறை, வேளாண்மை துறை, பயிர் காப்பீட்டு நிறுவனம் ஆகியன வெவ்வேறு காரணங்களை சொல்கின்றன. எனவே தமிழக அரசு பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து கிராமங்களும் விடுபடாத வகையிலும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.