ஆர்.எஸ்.மங்கலம் அருகே, இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் - 2 பேர் கைது

ஆர்.எஸ்.மங்கலம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-10-14 10:30 GMT
ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் ஜெயந்தி உத்தரவுப்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லப்பாண்டியன் மேற்பார்வையில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு திருப்பாலைக்குடி தெற்கு கடற்கரை பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, சுகுமாரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது திருப்பாலைக்குடி தெற்கு கடற்கரை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கிழக்கு கடற்கரை தெருவை சேர்ந்த அமீர்சேக் அப்துல்லா (வயது 26), முகமது அசாருதீன்(19) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

தொடர் விசாரணையில் பதிவு எண் செய்யப்படாத பைபர் படகில் இருவரும் இலங்கைக்கு கடத்துவதற்காக 200 கிலோ எடையுள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்