கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு வந்தால் உயிர்பலியை தடுக்க முடியும் - தமிழக சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சைக்காக வந்தால் உயிர்பலியை தடுக்க முடியும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரை,
தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று காலை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் செயல்படும் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் டீன் சங்குமணி மற்றும் டாக்டர்கள் உடன் சென்றனர். அப்போது நோயாளிகளிடம் அவர் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பெரிய மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தாலுகா அளவிலான மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. இது தேவையை விட அதிகம். பண்டிகை காலம், மழை காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் என்பதால் தீபாவளி பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடித்து பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்க வேண்டும்.
மதுரை கொரோனா சிறப்பு வார்டில் 599 படுக்கைகள் காலியாகும் அளவிற்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மட்டும் போதாது. பழக்க வழக்கம் அவசியம். அபராதம் வசூலிப்பது அரசின் பணி அல்ல. மக்களை எச்சரிக்கை செய்வதற்காக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்றால் அறிகுறி தெரிந்ததுமே சிகிச்சைக்கு வர வேண்டும். சரியான நேரத்தில் வந்தால் தான் முதியவர்களை காப்பாற்ற முடியும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
பண்டிகை காலத்தில் முக கவசம் அணியாமல் இருக்க கூடாது. தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். மேலும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து ஒத்துழைப்பு தரவேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் தொடங்க ஜப்பான் நிறுவனம் டிசம்பர் முதல் ஜனவரிக்குள் ஒப்புதல் வழங்க உள்ள நிலையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.