சொந்த வீட்டிலேயே கணவர் நகை திருடிய வழக்கில் பண்ருட்டி கோர்ட்டில் சின்னத்திரை நடிகை ஆஜர்

சொந்த வீட்டிலேயே கணவர் நகை திருடிய வழக்கில் பண்ருட்டி கோர்ட்டில் சின்னத்திரை நடிகை ஆஜரானார்.

Update: 2020-10-14 04:43 GMT
பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தேசிங்கு. இவரது மகன் மணிகண்டன்(வயது 24) கார் டிரைவர். இவருடைய மனைவி புவனேஸ்வரி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தேசிங்கு கடந்த மாதம் 12-ந்தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் அருகே உள்ள வயலுக்கு சென்றார். அதன்பிறகு அவர் தனது மனைவியுடன் மாலை வீடு திரும்பினார்.

அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 18 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரத்தை மர்மநபர் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தேசிங்கு மகன் மணிகண்டன் தனது சொந்த வீட்டிலேயே நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, சூதாடுவதற்கும், நடிகையான தனது மனைவி புதிதாக தொலைக்காட்சி தொடர் தயாரிப்பதற்காக தனது சொந்த வீட்டிலேயே நகை, பணம் திருட மனைவியுடன் சேர்ந்து திட்டம் போட்டு, திருடியது தெரியவந்தது. இதையடுத்து பண்ருட்டி போலீசார் மேற்கொண்ட திருட்டு சம்பவம் குறித்து புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த புவனேஸ்வரி முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, பண்ருட்டி கோர்ட்டில் புவனேஸ்வரி ஆஜர் ஆகி முன்ஜாமீன் பெற்று கொள்ளுமாறு கூறினார். அதைத்தொடர்ந்து புவனேஸ்வரி நேற்று காலை நேரில் ஆஜராகி பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கற்பகவள்ளி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் காலை 10.30 மணிக்கு புவனேஸ்வரி நேரில் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு செல்லவேண்டும் என்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார். இதையடுத்து புவனேஸ்வரி நேற்று பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார்.

மேலும் செய்திகள்