திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2, 490 ஆக உயர்வு புதிதாக 6 வாக்குச்சாவடிகள் அமைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2, 490 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-14 03:44 GMT
திருப்பூர்,

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் மற்றும் 1, 500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் கால அட்டவணை நிர்ணயம் செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகள் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரால் தணிக்கை செய்யப்பட்டு வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய வாக்குச்சாவடிகள் பட்டியல் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் நகல்களை மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி வெளியிட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா, தேர்தல் தாசில்தார் ரவீந்திரன் மற்றும் தாசில்தார்கள் உடனிருந்தனர். வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.

8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2, 484 வாக்குச்சாவடிகள் இருந்தன. 1, 500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது. அதன்படி திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 6 வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது. வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் மற்றும் ஒரே பள்ளியில் வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் என 40 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் மற்றும் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் திருப்பூர் கலெக்டர் அலுவலகம், அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்களான மாநகராட்சி அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள் தொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதும் இருந்தால் வருகிற 20-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் புகார் தெரிவிக்கலாம். தாராபுரம், காங்கேயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளவர்கள் அந்தந்த தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் புகார் மனுக்கள் தெரிவிக்கலாம். திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ளவர்கள் மாநகராட்சி ஆணையர் மற்றும் உதவி ஆணையாளரிடம் தெரிவிக்கலாம்.

வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் தொடர்பாக பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து வருகிற 20-ந் தேதி சட்டமன்ற தொகுதி அளவில் வாக்காளர் பதிவு அலுவலர்களால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகள் கேட்கப்படும். அதன் அடிப்படையில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் பரிந்துரை செய்யப்படும் அறிக்கையின் பேரில் மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியுடன் மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு இறுதி முடிவு செய்யப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்