மேலப்பாளையம் சந்தையில் ஆடு, கோழி விற்பனை செய்ய வந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பு

மேலப்பாளையம் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை செய்ய வந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-13 23:49 GMT
நெல்லை,

நெல்லை மேலப்பாளையத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சந்தை நடைபெறும். இங்கு ஆடு, கோழி, மாடு, கருவாடு மற்றும் உணவுப்பொருட்களும் விற்பனை செய்யப்படும். கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு இங்கு சந்தை நடக்கவில்லை. மேலும் சந்தையை சுற்றி அடைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக மேலப்பாளையத்தில் சந்தை நடந்தது. முதல் வாரம் சந்தைக்கு முன்பு ரோட்டில் வைத்து வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்தனர். கடந்த 2 வாரங்களாக சந்தையை திறந்து சந்தைக்குள் வைத்து வியாபாரம் செய்தனர்.

கூட்டம் அதிகரிப்பு

இதனால் அங்கு வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் கூடியது. யாரும் சமூக இடைவெளியை கடைபிடித்ததாக தெரியவில்லை. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என கருதி சந்தையை நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் சந்தையை பூட்டினர். மேலும் மறு உத்தரவு வரும் வரை சந்தை செயல்படாது என்றும், மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து பலர் லோடு ஆட்டோ, மினி லாரி, வேன் ஆகியவற்றில் சந்தைக்கு ஆடு, கோழிகளை அதிகளவில் கொண்டுவந்து விற்பனை செய்ய தொடங்கினார்கள். இதனால் அங்கு கூட்டம் அதிகரித்தது. சந்தையை பூட்டியதால் சந்தைக்கு முன்பு ரோட்டில் வைத்து வியாபாரம் நடந்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

அபராதம் விதிப்பு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் சுகி பிரேமலதா, உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், சங்கரலிங்கம் மற்றும் அதிகாரிகள், போலீசார் அங்கு சென்றனர். இவர்கள் அங்கு ஆடு, கோழி விற்பனை செய்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். அப்போது சிலர் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே மாநகராட்சி ஊழியர்கள் ஆடு, கோழி மற்றும் அவர்கள் விற்பனை செய்ய வைத்திருந்த பொருட்களை வாகனங்களில் ஏற்றி மண்டல அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. சில வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு உள்ளது. எனவே சந்தையை நடத்த முடியாது என்று கூறி அங்கு வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் மண்டல அலுவலகத்திற்கு கொண்டு சென்ற ஆடு, கோழிகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.3ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகாரிகள் எச்சரிக்கை

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா பரவல் நீடிப்பதால் மேலப்பாளையம் வாரச்சந்தை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இங்கு சந்தை நடைபெறாது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

மேலும் செய்திகள்