குஷ்பு 6 மாதமாக கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் - திருவண்ணாமலையில் கே.எஸ்.அழகிரி பேட்டி

குஷ்பு கடந்த 6 மாதங்களாக கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2020-10-13 11:45 GMT
திருவண்ணாமலை,

இது தொடர்பாக நேற்று திருவண்ணாமலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். கட்சித் தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாகவே அவர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருடைய விசுவாசத்தை மாற்றிக் கொள்வது என்பது அவருடைய சொந்தக் கருத்து.

ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு மிகப் பெரிய மரியாதையைக் கொடுத்தது. அகில இந்திய செய்தித் தொடர்பாளர் என்ற மிகப்பெரிய பதவியையும், அந்தஸ்தையும் கொடுத்தும் அதில் அவருக்கு திருப்தி வரவில்லை. குஷ்பு இதுவரை பேசியது எல்லாம் அவர் உள்ளத்திலிருந்து பேசியது அல்ல, அவர் உதட்டிலிருந்து பேசியது.

காங்கிரஸ் கட்சி அவருக்கு கொடுத்த உயரிய மரியாதை வேறு எங்கும் அவரால் பெற முடியாது. அவர் தனது தவறை எண்ணி பிற்காலத்தில் வருத்தப்படுவார். குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்றது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு காலத்திலும் இழப்பு கிடையாது. தாமரை இலை தண்ணீரைப் போலத்தான் அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் அவரை ஒரு நடிகையாக தான் பார்த்தார்கள். அரசியல் கட்சித் தலைவர் என்று அவரை பார்த்தது கிடையாது. பா.ஜ.க. குஷ்புவை விரும்பி கூப்பிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்