காரங்காடு பகுதியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அலையாத்திக்காடுகள்
காரங்காடு பகுதியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அலையாத்திக்காடுகள் உருவாக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் ஆற்று நீரும் கடல்நீரும் ஒன்று சேரும் இடங்களில் இயற்கை தந்த அருட் கொடையாக வளர்ந்து உருவாகியுள்ள அலையாத்தி காடுகள் எனும் சதுப்புநிலக்காடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளித்து வருகிறது. இங்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வளர்ந்துள்ள இந்த காடுகள் சுமார் 150 கிலோமீட்டர் வேகத்திற்கு வரும் கடல் அலைகளை தாங்கும் சக்தி வாய்ந்தவை என கூறப்படுகிறது. இந்த சதுப்பு நில காடுகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும் வசிக்கவும் உகந்த இடமாக கருதி இங்கு பல நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் பல்வேறு வகையான பறவைகள் வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் நம் நாட்டில் அலையாத்தி காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதையடுத்து இந்த அலையாத்தி காடுகளை பாதுகாக்கவும் அதிகரிக்கவும் புதிய அலையாத்தி காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் இந்த பகுதியில் உள்ள காரங்காடு, புதுப்பட்டினம், முள்ளிமுனை, சோழியக்குடி சம்பை, உப்பூர் இரட்டை பாலம், கடலூர், மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, காந்திநகர் போன்ற பகுதிகளிலும் மேலும் இம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, பாதனேந்தல், முத்துரெகுநாதபுரம், கண்ணாமுனை போன்ற பகுதியிலும் என 100 ஏக்கர் தரிசு நிலத்தில் அலையாத்தி காடுகள் உருவாக்கும் பணிகளை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக கடல்நீரை கொண்டுவர வாய்க்கால் தோண்டி சுழற்சியாக செல்லும் வகையில் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக மன்னார் வளைகுடா பகுதியில் விதைகளை சேகரித்து நட்டு வருவதாகவும், இவை 95 சதவீதம் வெற்றியை தந்துள்ளன எனவும் மேலும் இதற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட தூர்ந்துபோன வாய்க்கால்களிலும் விதைகளை நட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
காரங்காடு கிராமத்தில் உள்ள அலையாத்தி காடுகள் புயல், கனமழை, கடல் சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் கவசமாக இருந்து வருவதுடன் இறால், நண்டு, கணவாய் போன்ற பல்வேறு வகையான மீன்கள் அதிகஅளவில் கிடைக்கின்றன என்றும் இங்குள்ள மீனவர்கள் கூறுகின்றனர். மேலும் இதன்அழகை ரசிக்கவும் தினமும் சுற்றுலா பயணிகள் அதிகஅளவில் வருகின்றனர் என்றும் இதனால் வனத்துறை கிராம மக்களுடன் இணைந்து சூழல் சுற்றுலா மேம்பாட்டு மையம் செயல்படுத்தி வருவதுடன் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர வனத்துறை சூழல் சுற்றுலா மேம்பாட்டு மையம் மூலம் படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து செல்கின்றனர் என்றும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.