100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தனியார் விவசாய பணிக்கு ஏன் பயன்படுத்தக்கூடாது? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

“100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தனியார் விவசாய பணிக்கு ஏன் பயன்படுத்தக்கூடாது?” என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. மதுரை பேரையூரை சேர்ந்த சீனிவாசகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

Update: 2020-10-13 09:30 GMT
மதுரை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், கால்வாய்களை தூர்வாருதல், குளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமங்களில் வேலைவாய்ப்பு இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில், 100 நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். மதுரை சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதாவது, தகுதியற்றவர்களுக்கும் 100 நாட்கள் வேலை செய்வதற்கான அடையாள அட்டையை வழங்கி உள்ளனர். எனவே இந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “கேரளாவில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்கு வருபவர்களை தனியார் விவசாய நிலங்களில் பயன்படுத்துகின்றனர். ஆனால் தமிழகத்தில் பொழுது போக்குவதற்காக இந்த வேலையை பயன்படுத்துவதை போல இருக்கிறது. நீர்நிலைகளை தூர்வாருவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதாக தெரியவில்லை. தனியார் விவசாயத்திற்கும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தி, தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கின்றனர்” என்றனர்.

பின்னர், “கேரளாவைப்போல தமிழகத்திலும் இந்த திட்ட பணியாளர்களை தனியார் விவசாய வேலைகளுக்கு ஏன் பயன்படுத்தக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் செய்திகள்