சேலத்தில் 2 இடங்களில் திடக்கழிவுகளை எரியூட்டும் ஆலைகள் அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சேலத்தில், 2 இடங்களில் திடக்கழிவுகளை எரியூட்டும் ஆலைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-10-13 06:24 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் தினசரி 350 டன் அளவிலான திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. திடக்கழிவுகளை தினமும் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று 255 மூன்றுசக்கர இரண்டடுக்கு மின்கல வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மூலம் மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் மக்கும் தன்மை கொண்ட கழிவுகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.21 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு சென்று இயற்கை உரமாக மாற்றி அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் தூய்மை பணியாளர்களால் தரம் பிரிக்கப்பட்ட மறுசுழற்சி கழிவுகளை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 4 மண்டலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கழிவு சேகரிப்பு மையத்திற்கு கொண்டு சென்று மறுசுழற்சி பணிகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாநகர பகுதிகளில் சேகரமாகும் திடக்கழிவுகளில் மறுசுழற்சி பயன்பாட்டிற்கு உபயோகமில்லாத எரியக்கூடிய மக்காத திடக்கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி முறையாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செட்டிச்சாவடி மற்றும் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட எருமபாளையம் ஆகிய 2 இடங்களில் மக்காத எரியக்கூடிய திடக்கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டும் ஆலைகள் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதல் பெற்று தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் 44-வது வார்டில் எருமாபாளையம் பகுதி அமைக்கப்பட்டு வரும் மறுசுழற்சி பயன்பாட்டிற்கு உபயோகமில்லாத எரியக்கூடிய மக்காத கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டும் ஆலையை நேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்