ராசிபுரம் அருகே பரபரப்பு 6 மாதங்களாக பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட 2 சிறுமிகள் முதியவர் உள்பட 7 பேர் கைது

ராசிபுரம் அருகே 6 மாதங்களாக 2 சிறுமிகள் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் முதியவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-13 06:17 GMT
ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவரது தங்கையான 12 வயது சிறுமியும் அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர்களின் தந்தை இறந்துவிட்டதால், இருவரும் தாயுடன் வசித்து வந்தனர்.

இதனிடையே சிறுமிகள் இருவரும், அதே பகுதியை சேர்ந்த சிலரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில் 2 சிறுமிகளையும் அதே பகுதியை சிலர் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணகுமார், இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் அணைப்பாளையம் கள்ளுக்கடைமேட்டை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் கட்டிட மேஸ்திரி சிவா என்கிற சங்கர் (வயது 26), கூலித்தொழிலாளிகளான சண்முகம் (45), ஊமையன் என்கிற முத்துசாமி (75), வெல்டிங் பட்டறை தொழிலாளி மணிகண்டன் (30), லாரி பட்டறை தொழிலாளி சூர்யா (23), தனியார் டயர் தயாரிப்பு நிறுவன ஊழியர் செந்தமிழ்ச்செல்வம் (31), வரதராஜ் (55) மற்றும் சிலர் சிறுமிகள் இருவரையும் கடந்த 6 மாதங்களாக பலமுறை பலாத்காரம் செய்து பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே வேறு யாரேனும் சிறுமிகளை பலாத்காரம் செய்தார்களா? என்பது குறித்தும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரையும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தினர் தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்காள்-தங்கைகளை 7 பேர் கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்