கம்பளி வியாபாரியை எரித்து கொல்ல முயற்சி: தப்பி ஓடிய 4 பேரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைப்பு குற்றவாளிகளின் படத்தை வெளியிட்டு தேடுதல் வேட்டை தீவிரம்

கிருஷ்ணகிரியில் கம்பளி வியாபாரியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளின் படத்தை வெளியிட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Update: 2020-10-13 05:35 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் லைன்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாஷா (வயது 38) கம்பளி, பெட்ஷீட் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் டான்சி அருகில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பெண்கள் உள்பட 4 பேர் வந்து கம்பளியை கேட்டனர். அப்போது குறைந்த விலைக்கு கம்பளியை கொடுக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள், வியாபாரி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த காதர்பாஷா தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார்சைக்கிளை ஒரு ஆண் ஓட்ட, பின்னால் 2 பெண்கள் அமர்ந்து இருப்பது தெரியவந்தது. அந்த புகைப்படங்களை வெளியிட்ட போலீசார், அவர்களை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். தப்பி ஓடிய குற்றவாளிகள் கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் உள்ள 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் சூளகிரியில் இருந்து கிருஷ்ணகிரி வரையிலும், ராயக்கோட்டை சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களையும், பர்கூர் சாலையில் உள்ள கிராமங்களிலும் தீவிரமாக அவர்களின் புகைப்படத்துடன் தேடி வருகிறார்கள்.

கம்பளி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த சம்பவம் காரணமாக கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் நேற்று சாலையோர வியாபாரிகள் பலரும் கடைகள் அமைக்கவில்லை.

மேலும் செய்திகள்