வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 376 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-10-12 23:54 GMT
தஞ்சாவூர்,

மத்திய அரசின் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறவும் இதற்கு துணை போகின்ற மாநில அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று 14 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரகுமார், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கணேசன், மாநகர துணை செயலாளர் பக்கிரிசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

376 பேர் கைது

மறியல் போராட்டத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கருத்துக்கள் தெரிவிப்பதற்குள்ள ஜனநாயக உரிமையையும் பறித்து வாக்கெடுப்புக்கு கூட அனுமதி அளிக்காமல் அவசர அவசரமாக வேளாண் சட்டங்களையும் தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜன், முத்துக்குமரன், தொழிற்சங்க தலைவர்கள் துரை.மதிவாணன், செந்தில்குமார், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தையொட்டி போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல தஞ்சை மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் 376 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்