நொய்யல் ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் கதி என்ன? - தீயணைப்பு வீரர்கள் தேடும் பணி தீவிரம்
நொய்யல் ஆற்றில் வீசப்பட்ட குழந்தையை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நொய்யல்,
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் வீரமணி இவரது மனைவி சத்யா (வயது 22). இந்த தம்பதிக்கு பிறந்து 14 மாதங்களே ஆன டிஜய் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 10-ந்தேதி சத்யா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு, ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதிக்கு வந்துள்ளார்.
பின்னர் கொடுமுடியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது நொய்யல் ஆற்று பாலத்தில் நடுப்பகுதிக்கு வந்த அவர் திடீரென கையில் வைத்திருந்த குழந்தையை ஆற்றில் தூக்கி வீசினார். பின்னர் அவரும் பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கடந்த 10-ந்தேதி மாலை கொடுமுடி தீயணைப்பு துறையினர் அங்கு வந்து ஆற்றில் இறங்கி இரவு வரை குழந்தையை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2-வது நாளான நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நொய்யல் ஆற்றுப் பகுதியில் தேடினார். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று 3-வது நாளாக காலை முதல் இரவு வரை தீயணைப்பு வீரர்கள் நொய்யல் ஆற்றுப் பகுதியில் தீவிரமாக தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. நொய்யல் ஆறு நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. இதனால் நொய்யல் ஆறு கலக்கும் இடத்தில் இருந்து காவிரிஆற்றில் தவிட்டுப்பாளையம் வரை இரு கரைகளிலும் சென்றும் தீயணைப்பு வீரர்கள் குழந்தையை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தேடும் பணியின்போது சத்யாவின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் சிங்கம்செட்டிபட்டியை சேர்ந்த அவரது தந்தை கருப்பன் மற்றும் அவரது உறவினர்களும், கோவையைச் சேர்ந்த அவரது மாமனார் மற்றும் உறவினர்களும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து காவிரி ஆற்றில் குழந்தையை தேடிப் பார்த்தனர். குழந்தை கிடைக்காததால் நேற்று மாலை ஏக்கத்துடனும், சோகத்துடனும் திரும்பிச் சென்றனர். இதனால் குழந்தையின் கதி என்னவென்று தெரிவில்லை. இதையடுத்து 4-வது நாளாக இன்றும் குழந்தையை தேடும் பணி நடைபெறும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.