பாடலாசிரியர் மனைவியிடம் சொத்து அபகரிப்பு மூடநம்பிக்கை தடை சட்டத்தின் கீழ் போலி மந்திரவாதி மீது வழக்கு

பாடலாசிரியர் மனைவியை ஏமாற்றி சொத்தை அபகரித்த வழக்கில், கைதான போலி மந்திரவாதி மீது, மூடநம்பிக்கை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பெலகாவி போலீஸ் கமிஷனர் கூறினார்.

Update: 2020-10-12 21:53 GMT
பெலகாவி,

கன்னட திரையுலகில் பிரபல பாடலாசிரியராக இருப்பவர் கே.கல்யாண். இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி பெலகாவி மாலமாருதி போலீசில் கே.கல்யாண் ஒரு புகார் அளித்து இருந்தார்.

அந்த புகாரில் பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு வந்த எனது மனைவி, அவரது பெற்றோரை காணவில்லை என்றும், அவர்களை போலி மந்திரவாதியான சிவானந்த வாலி என்பவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவர்கள் 3 பேரையும் மீட்டு தர வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன்பேரில் அஸ்வினி, அவரது பெற்றோரை போலீசார் தேடிவந்தனர்.

இதற்கிடையே மாலமாருதி போலீஸ் நிலையத்திற்கு வந்த அஸ்வினி, தான் யாருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்றும், கே.கல்யாண் தனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்தார் என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ரூ.5 கோடி சொத்துகள்

தன் மீது மனைவி மீது குற்றச்சாட்டை மறுத்த கே.கல்யாண் எனது பெயரில் உள்ள சொத்துகள், எனது மனைவி பெயரில் உள்ள சொத்துகள், அவரது பெற்றோரின் சொத்துகளை போலி மந்திரவாதியான சிவானந்த வாலி அபகரித்து விட்டதாக மீண்டும் போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது சிவானந்த வாலி போலி மந்திரவாதி என்பதும், கே.கல்யாணின் மனைவி, அவரது பெற்றோரை ஏமாற்றி பெங்களூரு, பெலகாவி, அதானி, தார்வார், உப்பள்ளியில் உள்ள ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி சொத்துகளை அபகரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலி மந்திரவாதியான சிவானந்த வாலியை போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

மூடநம்பிக்கை தடை சட்டத்தில் வழக்கு

இந்த நிலையில் பெலகாவி போலீஸ் கமிஷனர் விக்ரம் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னட பாடலாசிரியர் கே.கல்யாணின் மனைவி, அவரது குடும்பத்தினரை ஏமாற்றி ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரித்த வழக்கில், போலி மந்திரவாதியான சிவானந்த வாலி என்பவரை மாலமாருதி போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் 9 வாகனங்கள், 350 கிராம் தங்கநகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டு உள்ளோம்.

மனிதாபிமானமற்ற தீய நடைமுறைகள் மற்றும் பில்லி, சூனியம் உள்ளிட்ட மூடநம்பிக்கை தடை சட்டத்தின் கீழ் சிவானந்த வாலியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிவானந்த வாலியின் கூட்டாளியான கங்கா குல்கர்னி என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கூடிய விரைவில் அவரும் கைது செய்யப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்