ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தின் மருமகன் விபத்தில் பலி

ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தின் மருமகன் விபத்தில் பலியானார்.

Update: 2020-10-12 23:00 GMT
பூந்தமல்லி, 

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கு.க.செல்வம். தி.மு.க.வைச் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்தார். இவருடைய மருமகன் துளசிராமன் (வயது 50). இவர், கோடம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

துளசிராமனின் மகள் பூந்தமல்லியை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு விடுதியில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு துளசிராமன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாக துளசிராமனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு துளசிராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து துளசிராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில்தான் பலியானது எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தின் மருமகன் என்பது தெரியவந்தது. ஆனால் விபத்து எந்த பகுதியில் நடந்தது? எப்படி நடந்தது? ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்துவிட்டு சென்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்