என்ஜினீயரிங் பட்டதாரி பெண் தற்கொலை

காலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தநிலையில் இரவில் என்ஜினீயரிங் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2020-10-12 19:12 GMT
ஆவடி, 

திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவருடைய மகள் லலிதாஸ்ரீ (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தார். இதற்காக வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தனியாக இருந்து வேலை செய்து வந்தார்.

வேலையை விட்டு விட்டு திருமணம் செய்துகொள்ளும்படி அவரை அவரது பெற்றோர்கள் வற்புறுத்தி வந்ததாகவும், ஆனால் லலிதாஸ்ரீ திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென அவரது பெற்றோர், தூரத்து உறவினரின் மகனுக்கு லலிதாஸ்ரீயை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தமும் செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்து மதியத்துக்கு மேல் புறப்பட்டு சென்றனர்.

அதன்பிறகு லலிதாஸ்ரீ, மாடியில் உள்ள தனது அறையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வரவில்லை.

இதையடுத்து இரவு 9 மணியளவில் மாடிக்கு சென்ற ராஜி, ஜன்னல் வழியாக பார்த்தபோது, அறையில் தனது மகள் லலிதாஸ்ரீ, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இரவில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்