மருத்துவமனையில் தேங்கும் மழை நீரால் டெங்கு அபாயம்

மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மழை நீர் தேங்குவதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நோயாளிகள் அமர இடம் இன்றி தவித்து வருகின்றனர்.

Update: 2020-10-12 04:16 GMT
மானாமதுரை,

மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் மானாமதுரை பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் மருத்துவமனை வளாகம் முழுவதும் ஆங்காங்கே மழை நீர் தெப்பம் போல தேங்கி கிடக்கிறது. அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் மழை நீர் தேங்கும் பகுதியில் தான் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் அமர வேண்டிய நிலை உள்ளது.

தற்போது மழை காரணமாக அங்கு தண்ணீர் தேங்குவதால் அவர்கள் உட்கார இடமின்றி அலைந்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று தற்போதுதான் சிவகங்கை மாவட்டத்தில் குறைந்து வருகிற நிலையில் தேங்கும் மழை நீரால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் தலைமை மருத்துவ அலுவலர் தேங்கும் மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்