திருக்கோவிலூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருக்கோவிலூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-10-12 03:23 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை அடுத்துள்ள அருதங்குடி கிராமத்துக்கு செல்லும் சாலைகள் கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறியதால் முற்றிலும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆனால் ஆத்திர அவசரத்துக்கு அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனால் விபத்துகளும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற வானங்கள் ஊருக்குள் வரமுடியாத நிலையில் உள்ளதால் சாலையை சீரமைக்ககோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாடாம்பூண்டி கூட்டுரோட்டில் அருதங்குடி கிராம மக்கள் திரண்டனர். பின்னர் பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் மறியலில் ஈபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்து திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், திருப்பாலபந்தல் சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியல் செய்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சாலையை சீரமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்று கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக திருக்கோவிலூர்-சங்கராபுரம் இடையே சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்