கொரோனா தடுப்பு குறித்து மோட்டார் சைக்கிளில் போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்

கொரோனா தடுப்பு குறித்து தேனியில் போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2020-10-12 02:34 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேனியில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்தார். நேரு சிலை சிக்னல் அருகில் தொடங்கிய ஊர்வலம் அல்லிநகரம் வழியாக அன்னஞ்சி விலக்கு வரை சென்று, பின்னர் அதே பாதையில் திரும்பி வந்து நேரு சிலை சிக்னல் பகுதியில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான போலீசார் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், இன்ஸ்பெக்டர்கள் சேகர், ராமலட்சுமி, விக்டோரியா லூர்துமேரி, பாலகுரு, செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் போடியில் போலீஸ் துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கலந்துகொண்டார். அப்போது முககவசம் அணியாமல் நடமாடிய நபர்களை அழைத்து, அவர்களுக்கு முககவசத்தை அவர் வழங்கினார். மேலும் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கமும் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்