பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை: வனப்பகுதியில் கொண்டு விட ஊழியர்கள் கோரிக்கை

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-10-11 23:50 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் 2 தளங்களை கொண்ட கட்டிடத்தில் உள்ளது. அதில் இயங்கும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பலர் அதிகாரிகளாகவும், ஊழியர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் அந்த அலுவலகங்களுக்கு கோரிக்கை தொடர்பாக மனு கொடுக்க பொதுமக்கள், விவசாயிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லையால் ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வனப்பகுதியில் குரங்குகளுக்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காததால், அவற்றை தேடி தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கு குரங்குகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் அவை பசியால் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுள்ள கெட்டுப்போன உணவு பொருட்களை எடுத்து உண்கின்றன. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் 2 தளங்களிலும் குரங்குகள் ஏறி, அலுவலகங்களின் ஜன்னல் வழியாக ஊழியர்களின் உணவு பொருட்களை எடுத்து சென்று சாப்பிடுகின்றன.

மேலும் கையில் வைத்திருக்கும் உணவு பொருட்களையும் விட்டு வைப்பதில்லை. அவற்றையும் பறித்து செல்கின்றன. குரங்குகள் அலுவலக முக்கிய கோப்புகளை எடுத்து சென்று விடுமோ? என்ற அச்சத்தில் ஊழியர்கள் உள்ளனர். மேலும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் பாட்டில்களை குரங்குகள் எடுத்து செல்கின்றன. அந்த வாகனங்களின் சீட் கவர்களை கிழித்து விடுகின்றன. இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகளை ஊழியர்கள் விரட்டினால், அவை கடிக்க பாய்கின்றன. இதனால் ஒருவித அச்சத்துடன் ஊழியர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்