தா.பழூரில் பரபரப்பு: சாலை பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

தா.பழூரில் சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-11 23:47 GMT
தா.பழூர், 

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள நந்தி நகரில், தா.பழூர் ஊராட்சி மன்ற மனைப்பிரிவு ஒப்புதல் பெறப்பட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த பகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் வணிகர்கள் மனைகளை வாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு இந்த பகுதியில் புதிதாக அரசு செலவில் மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. அதேபோல் ஊராட்சி மன்றம் சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து தரப்பட்டது. தற்போது நந்தி நகர் பகுதியில் தார் சாலை அமைக்க ஜல்லி உள்ளிட்ட மூலப்பொருட்கள் இறக்கப்பட்டது. அப்போது ஒருவர், சாலை அமைக்கப்பட உள்ள இடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மனைப்பிரிவை விற்றவரிடம் இருந்து, தான் விலைக்கு வாங்கி விட்டதாகவும், அந்த இடத்தில் சாலை அமைக்கக்கூடாது, அது பொதுப்பாதை அல்ல என்று தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த மனைப்பகுதிக்கு உள்ளே செல்வதற்கு அந்த பாதையை தவிர வேறு பாதை எதுவும் இல்லை. மனையை விற்றவர் பாதையை காட்டி அனைத்து மனைகளையும் விற்பனை செய்து விட்டு, பாதையாக இருந்த பகுதியை ஊராட்சி நிர்வாகத்திற்கு பதிவு செய்து தராமல் ஒருவருக்கு விற்பனை செய்து மனை வாங்கியவர்களை ஏமாற்றி விட்டதாக, அப்பகுதியை சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கடந்த மாதம் 17-ந் தேதி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த ஊரக வளர்ச்சி துறை மண்டல அதிகாரி ஆறுமுகத்திடம், நந்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பாதையை மீட்டு புதிதாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

இந்நிலையில் தற்போது அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென அங்கு வந்த நந்தி நகர் மக்கள், தங்களுக்கான பாதையை விட்டுவிட்டு மற்ற பகுதியில் தார் சாலை அமைக்கப்படுவதாகவும், தங்களுக்கான பாதையை மீட்டுத்தர கோரியும், எந்திரம் முன்பு அமர்ந்து சாலை பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதையை மீட்டு தருவதாக சாலை ஒப்பந்ததாரர் உத்தரவாதம் கொடுத்ததால், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்