முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை: தூத்துக்குடியில் பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) வருவதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2020-10-11 23:34 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறார். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதையொட்டி தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழா மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னோடி மாநிலம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநில முதல்-மந்திரிகளும் கொரோனா தடுப்பு களஆய்வு மேற்கொள்ளாத நிலையில், தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக களஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவர் கொரோனா தடுப்பு கள ஆய்வில் ஈடுபடுவதுடன், வளர்ச்சி திட்டங்களையும் ஆய்வு செய்கிறார். மேலும் தொழில் வர்த்தக அமைப்பினர், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரையும் சந்தித்து, மாநில வளர்ச்சி பணியிலும் ஈடுபடுகிறார்.

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார். அதேபோன்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைக்கின்றனர். தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் வைத்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன கருவியையும் அவர் இயக்கி தொடங்கி வைக்கிறார்.

பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள்

திரையரங்குகளை மீண்டும் திறக்க மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களை நமது மாநிலத்துடன் ஒப்பிடக்கூடாது. பல மாநிலங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. பல மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை திறந்து, பின்னர் மூடவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு அனைத்தும் ஆய்வு செய்து, மருத்துவ குழு அறிக்கைகளை பெற்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திரைப்படத்துறையை பொறுத்தவரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல தளர்வுகளை அறிவித்துள்ளார். விரைவில் திரையரங்குகளை திறக்க நல்ல முடிவுகளை அறிவிப்பார். திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகளையெல்லாம் ஆய்வு செய்துதான் முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செலுத்தப்பட்ட அதே அளவு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரிடம், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு செய்ய வேண்டியவை குறித்து கோரிக்கையாக வைத்தால் சிறப்பாக நிறைவேற்றி தருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்