கிராம உதவியாளர்கள் பதவி உயர்வு பெற பணி மூப்பு காலத்தை 6 ஆண்டாக குறைக்க வேண்டும்

கிராம உதவியாளர்கள் பதவி உயர்வு பெற பணி மூப்பு காலத்தை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என தென்காசியில் நடைபெற்ற அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2020-10-11 23:25 GMT
தென்காசி,

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழா தென்காசியில் நேற்று நடைபெற்றது.

மாநில தலைவர் காண்டீபன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட தலைவர் எம்.பரமசிவம், தென்காசி மாவட்ட தலைவர் கே.பரமசிவம், பொருளாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தீர்மானங்கள் குறித்து பேசினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு நான்காம் நிலைக்கு (டி பிரிவு) இணையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க அரசை கேட்டுக்கொள்கிறோம். அலுவலக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற பணிமூப்பு 10 ஆண்டு என்பதை 6 ஆண்டாக குறைக்க வேண்டும். கிராம உதவியாளர்களை அவசர காலங்களில் ரெயில்வே இருப்பு பாதை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போது குறைவான படி வழங்கப்படுகிறது. எனவே இந்தப் பணியில் ஈடுபடும் போது ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். இல்லை என்றால் இந்த பணியில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக முத்தையா, பொருளாளராக கே.பாலகிருஷ்ணன், துணைத் தலைவராக ஏ.பாலகிருஷ்ணன், தலைமை நிலைய செயலாளராக அன்பு, மாநில பிரசார செயலாளராக ஜமாலுதீன், துணை பொதுச் செயலாளராக ஆறுமுகம், அமைப்பு செயலாளராக காமராஜ், மாநில துணைச் செயலாளர்களாக கலைச்செல்வன், செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் மாவட்ட இணை பொதுச் செயலாளர் பாலசுந்தரம், மாநில அமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் ஆறுமுகம், பிரசார செயலாளர் மணி, செயலாளர்கள் ஜமாலுதீன், செந்தில்குமார், ராஜேந்திரன், பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் முத்தையா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்