பாலக்கரை மேம்பாலத்தில் இரும்பு தடுப்புகள் அமைப்பு: தொடர் விபத்துகளை தடுக்க போலீசார் நடவடிக்கை

தொடர் விபத்துகளை தடுக்க திருச்சி பாலக்கரை மேம்பாலத்தின் மையப்பகுதியில் இரும்பு தடுப்புகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2020-10-11 22:52 GMT
திருச்சி, 

திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாலக்கரையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஜங்ஷனிலிருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கும், சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ஜங்ஷன் நோக்கி செல்லும் வாகனங்கள் பாலக்கரை மேம்பால பகுதியை தான் கடந்து செல்ல வேண்டும்.

வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த பகுதியில் இந்த பாலத்தின் மீது வாகனங்கள் தாறுமாறாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறியது. பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து பீமநகர் நோக்கி செல்லும் வாகனங்கள் வளைவுகளில் திடீரென திரும்புவதால் வாகனங்கள் அடிக்கடி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் நடைபெறும் தொடர் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு சமூகநல அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் பாலத்தின் மையப்பகுதியில் 3 சாலை பிரியும் சந்திப்பில் நிழற்குடையுடன் கூடிய இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த இரும்பு தடுப்புகள் வாகனங்கள் அந்தந்த பகுதிக்கு தனித்தனியாக பிரிந்து செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு விபத்துகளும் தடுக்கப்படும்.

இதுகுறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன் கூறுகையில், “பாலக்கரை மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதை தடுக்கும் வண்ணம் முதல் கட்டமாக வாகனங்கள் தனித்தனியாக பிரிந்து செல்வதற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுபோல் மேலப்புதூர், பீமநகர், பாலக்கரை உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல வாகனங்கள் எந்த வழியாக செல்ல வேண்டும் என்று அம்பு குறியீடு காட்டுவதற்கு பெயிண்ட் அடிக்கப்படவுள்ளது. இதன் மூலம் வளைவுகளில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்வது தவிர்க்கப்பட்டு விபத்துகளும் குறையும்” என்றார்.

மேலும் செய்திகள்