பிளாஸ்டிக்கழிவு இல்லாத பகுதியாக இருகூர் பேரூராட்சி மாற்றப்படும்: கலெக்டர் ராஜாமணி தகவல்
பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பகுதியாக இருகூர் பேரூராட்சி மாற்றப்படும் என்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறினார்.
கோவை,
கோவையை அடுத்த இருகூர் சிறப்புநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பையில் இருந்து உரம் மற்றும் எண்ணெய் தயாரிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-
மக்காத கழிவுகள், மக்கும் திடக்கழிவுகள் குப்பைகளில் கலந்து விடுகிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுமுறையும் பயன்படுத்த தரம் பிரிக்க வேண்டியது மிக அவசியம். கோவை மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்து அவற்றை மறுசுழற்சி செய்து உபயோகமான பொருட்களாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் வீடு வீடாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை 2.75 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு சென்று குப்பைகளின் ஈரக்கழிவுகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எண்ணெய் தயாரிக்கும் எந்திரம் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் உபயோகமான எண்ணெயை அருகில் உள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். நிலம் மற்றும் நிலத்தடி நீரின் மாசுபாடு அடைவதை தடுக்க முடியும். மேலும், இருகூர் பேரூராட்சி, பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சுகாதாரமான பேரூராட்சியாக மாற்றப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.