பகுதி நேர என்ஜினீயரிங் படிப்பு தரவரிசை பட்டியல்: இன்று வெளியாகிறது
பகுதிநேர என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியாகிறது என்று ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தெரிவித்தார்.
கோவை,
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ், தமிழகத்தில் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, சி.ஐ.டி. கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பகுதிநேர என்ஜினீயரிங் (பிஇ., பிடெக்.) படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த படிப்புகளுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான தரவரிசை பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது.
இது குறித்து பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறியதாவது:-
பகுதிநேர என்ஜினீயரிங் படிப்பில் சேர மொத்தம் 1,465 இடங்கள் உள்ளன. அதற்கு 1,201 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். அதில் 520 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன. 179 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 126 பேரின் விண்ணப்பங்கள் தகுதியில்லாதவை ஆகும். இதைத்தொடர்ந்து தரவரிசை பட்டியல் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வருகிற 14-ந் தேதி நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 15 மற்றும் 16--ந் தேதிகளில் நடைபெறும். கூடுதல் விவரங்களை www.ptbe&tnea.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.