ஐ.எப்.எஸ். அதிகாரி போல் நாடகமாடிய வாலிபர் கைது

ஜனாதிபதியின் போலி கையெழுத்தை போட்டு ஐ.எப்.எஸ். அதிகாரி போல் நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-11 21:04 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி பிரியா. வக்கீலாக உள்ளார்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த சாய்நிவாஸ் என்ற கட்டிடத்தில் வசித்து வந்த பிரேம் வாகபள்ளி (வயது24) என்பவரின் அறிமுகம் பிரியாவுக்கு கிடைத்தது.

கர்நாடகாவை சேர்ந்த இவர், அப்பெண்ணிடம் தன்னை ஐ.எப்.எஸ். அதிகாரியாக வெளியுறவு துறையில் விசா மேலாண்மை அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். மேலும் அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தார். இதனை நம்பிய பிரியாவிடம் வெளியுறவு துறையில் உதவியாளராக வேலைக்கு சேர்த்து விடுவதாக அவர் தெரிவித்தார்.

சில நாள் கழித்து பிரியாவின் இ-மெயிலுக்கு பணி நியமன ஆணையை அனுப்பி வைத்து உள்ளார். இதுபற்றி அறிந்த அவரது கணவர் தினேஷ் சந்தேகம் அடைந்தார். இதனால் பிரேம் வாகபள்ளியை தனது வீட்டிற்கு அழைத்து பேசி உள்ளார்.

வாலிபர் கைது

அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தினேஷ், சம்பவம் குறித்து நாலச்சோப்ரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் பிரேம் வாகபள்ளியின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர் போலி ஐ.எப்.எஸ். அதிகாரி என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து அடையாள அட்டையை பறிமுதல் செய்து பார்த்ததில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் கையெழுத்தை அதில் போலியாக போட்டு மோசடி செய்து உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்