வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் சாவு
வேன்-மோட்டார் சைக்கிள் மோதலில், என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் அரவிந்தன் (வயது 21). தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை அரவிந்தன் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் ஆயில் மில் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதைக்கண்ட மினி வேன் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து காரணமான டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (57). இவர் மாமண்டூரில் இருந்து தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை திம்மாவரம் மேம்பாலத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வரதராஜன் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி 25 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.