மாமல்லபுரம் அருகே வேன்-கார் மோதல்; 4 பேர் சாவு - கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்

மாமல்லபுரம் அருகே கோவிலுக்கு சென்றபோது வேன்-கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-10-11 23:00 GMT
மாமல்லபுரம், 

புதுச்சேரியில் இருந்து 6 பேர் சென்னை தியாகராயநகரில் ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது அதிவேகத்தில் வந்த பார்சல் வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதில் காரில் இருந்த செந்தில் (வயது 40), முருகன் (53), ஜெயராமன் (70) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உருக்குலைந்த காரில் மேலும் 3 பேர் சிக்கி உயிருக்கு போராடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், தீயணைப்பு அலுவலர் சிவசங்கரன் மற்றும் போலீசார், அங்கு சென்று காரில் சிக்கி உயிருக்கு போராடிய ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி (60) பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காரில் பயணம் செய்து படுகாயம் அடைந்த சுபா (40), சுந்தரவரதன் (52) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்