மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி மாத 10 நாள் திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு அய்யா வைகுண்டசாமி அலங்கரிக்கப்பட்ட காளை, அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மம், குதிரை ஆகிய வாகனங்களில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை-உகப்படிப்பும், பின்னர் திருத்தேர் அலங்காரம் செய்தல், பணிவிடை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.
முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் நாதஸ்வரம், செண்டை, உறுமி மேளம் முழங்கப்பட்டது. பின்னர் இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரமும், 36 டன் எடையும் கொண்ட திருத்தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி, மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.
தேரோட்டத்தை தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், முன்னாள் எம்.பி. ஜெயதுரை ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது பக்தர்கள் அய்யா அரகர சிவ சிவ, அய்யா உண்டு, என பக்தி பரவசத்துடன் விண்ணதிர முழங்கினர்.
வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க போலீசார் அனுமதி தராததால் தேரின் முன்புறத்தில் ராட்சத கிரேன் மூலம் முன்பக்கமாக தேரை இழுக்க, 2 ஜே.சி.பி எந்திரங்கள் தேரின் பின்னால் இருந்து தள்ளியபடி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
பக்தர்கள் ஆங்காங்கே முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தனியார் மூலம் நடைபெறும் அன்னதானம், நீர்மோர் வினியோகமும் தடைசெய்யப்பட்டு இருந்தது.
விழாவில் மாலையில் அய்யா இந்திர விமானத்திலும், இரவு பூம்பல்லக்கு வாகனத்திலும் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து திருநாமக்கொடி அமர்வுடன் திருவிழா நிறைவுற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.