ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
துரைப்பாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் பிரபல தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்ம நபர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக்கொண்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமனுக்கு தகவல் கொடுத்தனர்.
அவரது உத்தரவின் பேரில் துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டுகள் நந்தகோபால், வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த வாலிபர் தப்பி ஓடமுயன்றார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், பெரும்பாக்கம் எட்டுஅடுக்கு பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (வயது 28) என்பதும், இவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து லாரன்சை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.