புதிய தார் சாலை அமைத்தும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மீண்டும் மழைநீர் தேங்கியது

புதிய தார் சாலை அமைத்தும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மீண்டும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2020-10-11 18:17 GMT
ஈரோடு,

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் கொரோனா பாதிப்பு காரணமாக வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் ரூ.1 கோடி செலவில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டது. மழை பெய்யும்போது மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும், சேறும், சகதியுமாக மாறியதால் வியாபாரிகளும், காய்கறிகள் வாங்க வந்த மக்களும் பெரும் சிரமப்பட்டனர். எனவே மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பிறகு தற்காலிக மார்க்கெட்டில் புதிதாக தார் சாலை அமைக்க சுமார் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிய தார் சாலையும் அமைக்கப்பட்டது. இதற்காக 3 நாட்கள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று காலையில் இருந்து வழக்கம்போல் மார்க்கெட் செயல்பட தொடங்கியது.

மழைநீர் தேங்கியது

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஈரோட்டில் கனமழை பெய்ததால், மார்க்கெட்டில் மீண்டும் மழைநீர் தேங்கி நின்றது. கடைகளுக்கும், புதிய சாலைக்கும் இடைபட்ட பகுதியில் பள்ளம்போல் இடைவெளி இருந்ததால், அங்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் காய்கறிகளை வாங்க வந்த மக்கள் தண்ணீரில் இறங்கி சென்று காய்கறிகளை வாங்க வேண்டியிருந்தது. ஒருசில கடையினர் காய்கறிகள் கொண்டு வருவதற்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களை கடையின் முன்பு போட்டு வைத்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

வடிகால் வசதி

மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தார் சாலை முழுமையாக அமைக்கப்படாமல் நடுப்பகுதியில் மட்டும் போடப்பட்டது. இதனால் சாலையின் இருஓரங்களுக்கும், கடைகளுக்கும் இடையே உருவான பள்ளத்தில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது.

இவ்வாறு தண்ணீர் தேங்குவது தொடர் கதையாகிவிட்டால், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்படும். எனவே தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்