மண் சரிந்ததால் உருவான பள்ளம்: ஆற்றூர்-அருமனை சாலையில் 2-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அவதி

பக்கச்சுவர் கட்டும் பணியின் போது மண் சரிந்ததால், சாலையில் உருவான பள்ளம் காரணமாக 2-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2020-10-11 05:45 GMT
அருமனை,

திருவட்டார் அருகே ஆற்றூர்-அருமனை சாலையில் தேமானூர் பகுதியில் பாலம் முகப்பு சாலையில் பக்க சுவர் கட்டும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் பக்க சுவர் கட்டுவதற்காக பொக்லைன் எந்திர உதவியுடன் மண் எடுக்கும் பணி நடந்தது.

அப்போது திடீரென மண் சரிந்ததால் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெகன் செல்வராஜன், சாலை பணியாளர் கனகராஜ், பொக்லைன் எந்திர உதவியாளர் கணேசன் ஆகியோர் மண்ணுக்குள் புதைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் மண்ணை அப்புறப்படுத்தி 3 பேரையும் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அருமனை-ஆற்றூர் சாலை அந்த பகுதி மக்களுக்கு முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம் போன்ற பகுதிகளுக்கு விரைவாக செல்ல முடியும். அவ்வளவு முக்கியமான சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதால் 2-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். எனவே சாலைக்கு பக்கச் சுவர் கட்டி உடனடியாக பணியை முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்