வாலாஜா அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

வாலாஜா அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-11 06:15 GMT
வாலாஜா, 
வாலாஜாவை அடுத்த சின்னதகரகுப்பம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு. அவருடைய மகள் பிரேமா (வயது 34). இவர், வாலாஜா பஸ் நிலையம் அருகில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பிரேமா கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

சின்னதகரகுப்பம் அருகே சென்ற போது பிரேமாவை திடீரென 2 பேர் வழிமறித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து வாலாஜா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பெரியதகரகுப்பம் டேங்க் தெருவை சேர்ந்த சிலம்பரசன் (27), வாலாஜாவை அடுத்த பாலாறு அணைக்கட்டு முகாமில் வசிக்கும் ரெட் சேகர் (28) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்