திருப்பூரில் போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாம்: பொதுமக்களின் 103 புகார்களுக்கு உடனடி தீர்வு - கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்ணால் பரபரப்பு
திருப்பூரில் போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் 103 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் ஒரு பெண் கண்ணீர் விட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
பொதுமக்கள் நலன் கருதியும், பொதுமக்களின் குறைகளை போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணும் வகையிலும் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்களை நடத்துமாறு போலீஸ் ஏ.டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் திருப்பூர் மாநகரத்திற்குட்பட்ட வடக்கு, தெற்கு சரகங்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் போலீஸ் கமிஷனர்கார்த்திகேயன் தலைமையில், துணை கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் வடக்கு சரகத்தில் குமார்நகரில் உள்ள திருமண மண்டபத்திலும், தெற்கு சரகத்தில் மங்கலம் ரோடு தனியார் ஹாலிலும் நடைபெற்றது. இந்த முகாமை கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
இந்த முகாம் மூலமாக நீண்ட நாள் நிலுவையில் உள்ள புகார்களை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும். ஆன்லைன் மூலமாக கடன் தருவதாக கூறும் நபர்களை நம்பி பொதுமக்கள் ஏமாறக்கூடாது. வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பாக பேசும் நபர்களை தவிர்க்க வேண்டும். அவசர தேவைக்கு பொதுமக்கள் 100 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வடக்கு சரகத்தில் வடக்கு, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் எல்லைக்குட்பட்ட 80 புகார் மனுக்கள் தொடர்பாக மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும் வந்திருந்தனர். அவர்களிடம் வடக்கு சரக உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் 68 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
இதேபோல் தெற்கு சரகத்தில் தெற்கு, மத்திய, ஊரக, வீரபாண்டி போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட 35 புகார்கள் மனுக்களை தெற்கு சரக உதவி கமிஷனர் நவீன்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தினார்கள். இதில் 35 மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
முகாமில் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த மேகலா என்பவர் முகாமில் கலந்து கொண்டு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்குவதாக கூறி ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் மிகவும் ஏழ்மை நிலையில் சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக கூறி, விசாரணை நடத்திய அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் முனியம்மாளிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.